Sunday 25 July 2010

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய வரலாறு.


யாழ்ப்பாணத்திலுள்ள புகழ்பூத்த சைவக்கிராமங்களில் சுதுமலையும் ஒன்று. இலங்கையின் வடபகுதியிலுள்ள சுத்த நீரோடைகளும், மா, பலா, வாழை, கமுகு, பனை முதலான தாவரங்களும், சிறப்புற்றோங்கும் கண்கவர் வனப்புக்கள் மிகுந்த சுதுமலை கிராமம் யாழ்ப்பானத்தின் நடுப்பகுதியில் ஆனைக்கோட்டை, மானிப்பாய், உடுவில், இணுவில், தாவடி ஆகிய ஊர்களின் மத்தியில் ஒரு உயரிய கிராமமாக விளங்குகின்றது.

கண்ணகியின் வரலாறு நாம் எல்லாம் அறிந்ததே. மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு பின் கண்ணகி ஐந்து தலை நாகமாக தன்னை உருமாற்றிக்கொண்டு தெற்கு நோக்கி சென்று முதலில் நயினாதீவில் தங்கி பின் சுருவில், வட்டுக்கோட்டை, நவாலி, களுவோடை, சுதுமலை, சீரணி, அங்கணாமைக்கடவை, அளவெட்டி, வற்றாப்பளை முதலிய இடங்களில் தங்கினாள் என கர்ண பரம்பரைக் கதை கூறுகின்றது.

கண்ணகி சுதுமலையில் தங்கி இளைப்பாறிய இடத்தில் சுதுமலை வாழ்மக்கள் ஒரு கொட்டில் அமைத்து தங்கு சங்களை எனப்பெயரிட்டு வழிபட்டு வந்தனர். இந்த இடம் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் தந்தை சேர் பொன்னம்பல முதலியார் அவர்களினது ஆகும். (ஆதாராரம் எம். வைத்திலிங்கம் எழுதிய சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்ற ஆங்கில நூல் ) இக் கோவில் இன்று ஆலமரங்களிற்கு மத்தியில் அரசமரத்தின் கீழ் மூன்று சிலைகளை கொண்டதாக அமைந்துள்ளது. கோவிலின் முன்பாக கடம்ப மரம் உள்ளது.

ஈழத்தில் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு இருந்து வந்த கண்ணகி வழிபாடு ஸ்ரீலஸ்ரீ.ஆறுமுகநாவலர் அவர்களின் காலத்தில் அவரினால் இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில்களாகவும், புவனேஸ்வரி அம்மன் கோவில்களாகவும் மாற்றப்பட்டன. அப்போது அமைக்கப்பட்டதே இன்றைய புவனேஸ்வரி அம்மன் கோவில் என்ற முடிவிற்கு நாம் வரலாம். தங்கு சங்களையில் கொட்டில் கோவிலாக இருந்த போது பறுவதாபத்தினி அம்மன் என அழைக்கப்பட்டது. இது 1775 ஆம் ஆண்டு கச்சேரியில் பறுவதா பத்தினி அம்மன் கோவில் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 1822ஆம் ஆண்டில் இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் எனவும் பின்னர் மனோன்மணி அம்மன் கோவில் எனவும் அழைத்து வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. 1919 ஆம் ஆண்டளவிலிருந்தே ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் என அழைக்கப்பட்டு வருகின்றது.

ஈழத்தின் சிறந்து விழங்கும் சக்தி கோவில்களில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் சிறப்புடையதொன்றாகும். இக்கோவில் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கண் அமைந்துள்ளது. கோவிலின் தெற்கு பக்கத்தில் சிவன் கோவிலும், முருகமூர்த்தி கோவிலும் அமைந்துள்ளன. இம்மூன்று கோவில்களிற்கும் எதிரில் காவல் தெய்வமாக வயிரவர் கோவில் அமைந்துள்ளது.
திராவிட கட்டிடக்கலை மரபை பிரதிபலிக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இராஜகோபுரம் முன்வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நுழைவாயிலின் முன் விசாலமான மண்டபம் உள்ளது. உள்ளே கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தர்சன மண்டபம்(உருத்திர மண்டபம்), நந்தி, பலிபீடம், ஸ்தம்பம், ஸ்தம்ப வினாயகர் உள்ளன. வினாயகர், மகாவி~;ணு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டேஸ்வரி, வயிரவர், நவக்கிரகங்கள் ஆகியோரிற்கு தனித்தனி பரிவாரக் கோவில்கள் உள்ளன. மூலஸ்தான வெளிப்புறச் சுவர்களில் தெற்கில் நிர்த்த கணபதி, மாகேஸ்வரி, மேற்கில் வை~;ணவி, வடக்கில் பிராம்மி – துர்க்கை, ஆகிய கோஸ்ட தேவதைகள் அமைந்துள்ளன. விமானம் துவிதளமாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் திருவுருவம் ஒருகை அபயமாகவும், மறுகை வரதமாகவும், பின்கை ஒன்றில் தாமரை மலரும், மறு பின்கையில் அட்சமாலையும் உள்ளதாக அமையப்பெற்றது. அம்பாளிற்கு இந்துமத புராணக்கதைகளைச் சித்தரிக்கும் அழகிய தெய்வீக கலைஅம்சத்துடன் கூடிய சிற்பங்களையுடைய கண்கவர் தேர் உள்ளது. அழகே உருவான தேர்முட்டி, கேணி, தீர்த்தக்கிணறு, உள்வீதிக் கொட்டடைகளும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட பல வாகனங்களும் உள்ளன.


உற்சவங்கள்:-
இங்கு வருடா வருடம் வைகாசி விசாக பௌர்ணமி அன்று தீர்த்தோற்சவ திருவிழா நடைபெறும்விதமாக மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி பதினாறு திருவிழாக்கள் நடைபெற்று, பதினேழாம் நாள் தேர்த்திருவிழாவும், பதினெட்டாம் நாள் தீர்த்தோற்சவமும், இருபதாம் நாள் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறும். மகோற்சவ தினங்களில் வினாயகரிற்கும், சுப்பிரமணியரிற்கும் பிரத்தியேக யாக வழிபாடு செய்யப்பட்டு, அதனைத்தொடர்ந்து அம்மனிற்கு மகாயாகம் செய்யப்படுவத வழக்கமாகும.;
மகோற்சவம் ஆரம்பமாதற்கு முதல்நாள் கோவிலின் முன்புறமுள்ள வைரவரை மகோற்சவங்கள் யாவும் வெற்றிகரமாக நடந்து முடிய வேண்டுமென அனுக்ஞை கேட்டு பிராத்திப்பது வழக்கமாகும். பின்னர் தேர்த்திருவிழர அன்று மாலை வெற்றிக்கழிப்பை வெள்ளைக் கொடியேற்றிக் கொண்டாடுவது வழக்கமாகும்.
ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உதயகாலம், காலை, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய ஐந்து வேலை பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. சாக்த நெறியில் கன்னியர்களை வழிபடும் கன்னிகா பூசை இங்கு ஆடிப்பூரத்தில் குமாரிபூசை அல்லது பூரகர்மா (ருது சாந்தி) என அழைத்து வழிபட்டு வருகின்றனர். கும்பாபிசேக தினத்தை நினைவு கூறும் விதமாக பங்குனி சுவாதி நட்சத்திரத்தில் மகாசங்காபிசேகம், அன்னதானம், குளிர்த்தி நடைபெற்று வருகின்றது. ஆடி மாதத்தில் இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவன்று தேர் வீதிவலம் வரும் போது பொங்கல் வைத்து மடைபரப்பி வழிபாடு செய்வது தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. அன்று இரவு தங்கு சங்களையில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும்.


Ukumar-London

No comments:

Post a Comment